திருடிவிட்டு வீட்டு ஓனரிடமே லிஃப்ட் கேட்ட வடமாநில இளைஞர்; ஆவடியில் பட்டப்பகலில் அதிர்ச்சி
திருடிவிட்டு வீட்டு ஓனரிடமே லிஃப்ட் கேட்ட வடமாநில இளைஞர்; ஆவடியில் பட்டப்பகலில் அதிர்ச்சிஅண்மையில் தாம்பரம் கௌரிவாக்கம் அருகே நகைக்கடை ஒன்றில் வடமாநில இளைஞர்கள், ஒன்றாகச் சேர்ந்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ஒன்றரை கோடி மதிப்பிலான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வீட்டில் புகுந்து தங்க நகையை திருடிய வடமாநில இளைஞர் ஒருவர் மக்களிடம் சிக்கிக்கொண்ட நிலையில் அவரை கட்டி வைத்துத் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.ஆவடி மோரை ஊராட்சியை அடுத்த வீரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இன்று காலை ஜெகன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியை நோட்டமிட்ட வடமாநில இளைஞர் ஒருவர் ஜெகன் வீட்டில் நுழைந்து பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஏழு சவரன் நகைகளைத் திருடியுள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த அந்த நபர் அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெகனிடமே லிஃப்ட் கேட்டுச் சென்றுள்ளார். அப்பொழுது செல்போன் மூலமாக ஜெகனுக்கு அவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. எதேச்சையாக லிஃப்ட் கேட்ட நபரை ஆய்வு செய்தபோது அவரிடம் இருப்பது தன்னுடைய வீட்டு நகைகள் எனத் தெரிய வந்தது. உடனே வடமாநில இளைஞர் தப்பி ஓட முயன்றதால் ஜெகன் ஓடிச்சென்று அவரைப் பிடித்து கம்பம் ஒன்றில் கட்டி வைத்துள்ளார்.அதன் பிறகு ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து வடமாநில இளைஞரை சரமாரியாகத் தாக்கினர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ஆவடி போலீசார் வடமாநில இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.