கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் ஆசியாவின் முதல் மார்பக தொழில்நுட்ப பயற்சி மையம் துவக்கம்
மார்பக இமேஜிங் தொழில்நுட்பத்தில் உலகின் முதன்மையான நிறுவனமாக ஹோலோஜிக் விளங்குகிறது. இத்துறையில் தங்களது தொழில்நுட்ப தயாரிப்புகள் அதிகபட்ச பயன் அளிக்கவேண்டும் என்பதற்காக மருத்துவர்களுக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் தேவையான பயிற்சிகள் அளிப்பதில் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது. இதன் அடிப்படையில் இந்த நிறுவனம் சார்பாக ஏற்கனவே அமெரிக்காவிலும் பெல்ஜியம் நாட்டிலும் இரு பயிற்சி மையங்கள் (அகாடமி) செயல்பட்டு வருகின்றன. ஆசியாவிலும் அப்படிப்பட்ட உலகத்தரமான மார்பக இமேஜிங் பயிற்சி மையத்தை அமைத்திட வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும்போது கேஎம்சிஹெச் மருத்துவமனை அதற்குரிய சிறந்த தேர்வாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.
மார்பக இமேஜிங் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இத்துறையில் இந்தியாவின் முன்னணி மருத்துவ நிபுணர்களில் ஒருவராக மதிக்கப்படும் டாக்டர் ரூபா ரங்கநாதன் மார்பக புற்று நோய் சிகிச்சை பிரிவுக்கு தலைமையேற்று வழிநடத்தி வருகிறார். கேஎம்சிஹெச் மருத்துவமனை மார்பக புற்று நோய் சிகிச்சை பிரிவில் ஹோலோஜிக் நிறுவனத்தின் அதிநவீன மேமோகிராபி கருவி உள்ளது. இது அதிக பட்ச துல்லியத்துடன் படம் பிடிக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் இது அதிவேகமாக டோமோசிந்தசிஸ் (மார்பக சிடி ஸ்கேன் போன்றது) செய்யும் திறன் பெற்றது. இது உலகின் மிகச்சிறந்த கான்ட்ராஸ்ட் மேம்படுத்திய மேமோகிராபியாகும்.
மார்பக இமேஜிங் தொழில்நுட்பம் என்பது மேமோகிராபி மட்டுமல்ல. அதற்கு உயர்தரத்துடன் கூடிய அல்ட்ரா சவுண்ட் இயந்திரங்களும் தேவை. கேஎம்சிஹெச் பெற்றுள்ள சூப்பர்சானிக் மேக் 30 என்ற இயந்திரம் சிக்கலான மார்பக இமேஜிங்கிற்கான உலகின் மிகச்சிறந்த தொழில்நுட்பமாகும். 3டி திறன் கொண்ட மேமோகிராபியும் அதிதுல்லிய அல்ட்ராசவுண்ட் இயந்திரமும் இணைந்து செயல்படும்போது மார்பகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாறுபாடுகளை துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.
பயிற்சி மையத்தை துவக்கி வைத்து உரையாற்றிய ஹோலோஜிக் நிறுவனத்தின் ஆசிய மண்டல உதவி தலைவர் மற்றும் பொது மேலாளர் லிண்டா சியா, ஆசியாவின் எந்த பகுதியில் இருந்தும் பயிற்சி பெற விரும்புவோர் இந்த கோவை மையத்தில் பயிற்சி பெறலாம் என்று கூறினார். மருத்துவ உபகரணங்கள் வாங்கும்போது அவற்றை உபயோகிப்பதற்கான போதுமான பயிற்சி இல்லை என்று அவர்கள் எண்ணாமல் இருப்பதை இந்த மையம் உறுதிசெய்யும் என்று தெரிவித்தார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து நிகழ்வும் மையத்தின் திறப்பு விழாவும் ஹோலோஜிக் நிறுவனத்தின் ஆசிய மண்டல உதவி தலைவர் மற்றும் பொது மேலாளர் லிண்டா சியா, வெங்கட்ராமன், வர்த்தக இயக்குனர் பவுல் ஸ்டீபன் மற்றும் இந்திய பிராந்திய வர்த்தக மேலாளர் ஆகியோர் உள்ளிட்ட நிறுவனத்தின் முதுநிலை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.