இந்தியர்களுக்கு என் வாழ்த்துகள்!- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.
ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. அதாவது உலகின் மிகப்பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட 20 நாடுகளின் கூட்டமைப்பிற்கு இப்போது நாம் தலைவர்.இந்தச் சாதனை மகத்தானது. இம் மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவருக்கும் உரியது. இதை தனிப்பட்ட அரசியல் கட்சிகள் சாதித்தன என்று சொந்தம் கொண்டாட முடியாது. இதைச் செய்து முடிக்க நமக்கு 75 ஆண்டுகளாகியுள்ளன. ஒரு தேசமாக நாம் பெருமை கொள்ளத்தக்க தருணம் இது. இம்மண்ணில் முகிழ்த்த புத்தனும், மகாவீரரும், வள்ளுவனும், காந்தியும் காட்டிய பாதையில் சென்றதால் விளைந்த கனி இது. இதை நாம் அழுக விடலாகாது. உலகில் சமாதானத்தை உருவாக்கி அமைதியை கட்டி எழுப்புங்கள் என ஃப்ரெஞ்ச் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நம்மை வாழ்த்துகிறார். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதே இந்திய தரிசனம். அதை இன்னொருவர் நினைவுறுத்த வேண்டிய இடத்திற்குச் செல்லாதிருப்பதே அறிவுடைமை. மெதுமெதுவாகத்தான் எனினும் நாம் வெகுதூரம் முன்நகர்ந்து வந்திருக்கிறோம். பகைமை, வெறுப்புணர்ச்சி, பிரிவினைகள் எனும் சுமைகளைத் துறந்ததால்தான், நம்மால் நகர முடிந்தது. நாஞ்சில்நாடன் சொல்வதைப் போல ‘தன்படை வெட்டிச் சாதல்’நிகழ அனுமதிக்கவே கூடாது. நாம் ஒருவரொடுஒருவர் வெறுப்பைச் சுமந்துகொண்டிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது. இந்தியா தலைமையேற்ற பிறகு நடக்கும் முதலாவது கூட்டத்திற்கு சக இந்தியனின் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். – கமல் ஹாசன்தலைவர் – மக்கள் நீதி மய்யம்