WhatsApp | 9087316855
Advertise

NASA’s Artemis-1 rocket launched after a long struggle

நிலவு ஆய்வு பணி: நீண்ட போராட்டத்திற்கு பின் விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்

*நிலவு ஆய்வு பணி: நீண்ட போராட்டத்திற்கு பின் விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்*அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவுக்கு கடந்த 1972-ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை அனுப்பியது. அதன்பின் கடந்த 50 ஆண்டுகளாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் பரிசோதனை முயற்சி நிறைவேறவில்லை. இந்த நிலையில், மீண்டும் நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டத்தில் முனைப்புடன் நாசா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன்படி, வருகிற 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. எனினும், ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி, விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு தொலைவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆர்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும்.இதன் பயண திட்டம் முதலில், கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் தொடங்க திட்டமிடப்பட்டது. எனினும், எரிபொருள் கசிவு உள்ளிட்ட தொழில் நுட்ப கோளாறால் திட்டம் தள்ளி போனது. தொடர்ந்து, செப்டம்பர் 3-ந்தேதி மீண்டும் எரிபொருள் கசிவால் திட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின்னர், ஐயான் மற்றும் நிகோல் என இரண்டு சூறாவளிகளால் ராக்கெட்டின் பாதுகாப்பிற்காக நிலவு பயண திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த முறை நவம்பர் 16-ந்தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என நாசா விண்வெளி கழகத்தின் மூத்த அதிகாரி ஜிம் ப்ரீ டுவிட்டரில் பதிவிட்டார். தொடர்ந்து 2 முறை எரிபொருள் கசிவு, 2 முறை சூறாவளி புயலால் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்ட சூழலில், இந்த முறை அந்த முயற்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பும் நாசாவின் திட்டம் எரிபொருள் கசிவால் 3-வது முறையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவில் ராக்கெட்டை செலுத்த தயாரான நிலையில், திடீரென ஹைடிரஜன் வாயு கசிவை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதற்கான சரியான காரணம் பற்றி அவர்கள் தெரிவிக்கவில்லை.எனினும், குறைவான அளவிலான கசிவுக்கு நடைமுறையை மாற்றியமைத்தனர். 322 அடி நீளமுள்ள ராக்கெட்டுக்குள் மீண்டும் எரிபொருளை செலுத்தி, வெளியேற விடாமல் பாதுகாப்புடன் வைக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்கள் தெரிவித்தனர். 6 மணிநேர திட்டம் இறுதியடையும் சூழலில் ஹைடிரஜன் வாயு கசிவு கண்டறியப்பட்டது. இதற்காக வாயுவின் அழுத்தம் குறைக்க செய்யும் முக்கிய பணியும் நடந்தது. ஒருபுறம் கவுன்ட்-டவுன் நடந்தபோதும் மறுபுறம் சிவப்பு குழு எனப்படும் பணி குழுவினர் தொடர்ந்து கசிவை சரி செய்யும் பணியை தொடர்ந்தனர். அந்த ராக்கெட்டுக்குள் 37 லட்சம் லிட்டர் அளவுக்கு அதிகம் குளிர்விக்கப்பட்ட ஹைடிரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயு உட்செலுத்தப்பட்டு உள்ளது. இன்று காலை, ராக்கெட் செலுத்தப்படும் நிகழ்வை காண பீச் மற்றும் சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் திரண்டிருந்தனர். எனினும், எரிபொருள் கசிவை சரிசெய்யும் சூழலில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த பணி ஒரு வழியாக நிறைவடைந்தது.இந்த நிலையில், நிலவு ஆய்வு பணிக்கான நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நீண்ட போராட்டத்திற்கு பின்பு இன்று மதியம் 12.17 மணியளவில், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது. இதனால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ராக்கெட் செலுத்தப்பட்ட எட்டு நிமிடங்களுக்கு பின்னர், மைய பகுதியில் உள்ள இயந்திரம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக சென்றது. இதனை அடுத்து, ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு இருந்த ஆரியன் விண்கலம் நிலவை நோக்கி பயணிக்கிறது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe