பெர்மிட், புதுப்பித்தல் கட்டணம் உயர்வு: அபராதம் மட்டும் அதிகரிக்கப்படுவது வேதனை
*ஆட்டோ, டாக்சி, ஆம்னி பஸ்களுக்கு பெர்மிட், புதுப்பித்தல் கட்டணம் உயருகிறது*பொது மோட்டார் வாகனங்களுக்கான பெர்மிட் கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்து துறை சார்ந்த கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த மாதம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. மோட்டார் வாகனங்களின் பதிவுக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது.இந்த நிலையில் போக்குவரத்து துறை மேலும் பல்வேறு கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. ஆட்டோ, வாடகை கார், தனியார் ஆம்னிபஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெர்மிட், புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 177 சதவீதம் வரை கட்டணம் உயருகிறது.பஸ், சரக்கு வாகனங்களுக்கு தலா ரூ.3000, ஆட்டோவிற்கு ரூ.400, வாடகை கார் போன்ற ஒப்பந்த வாகனங்களுக்கு ரூ.1,100, ஒப்பந்த மேக்ஸி கேப் வாகனங்களுக்கு ரூ.1,500, தனியார் ஆம்னி பஸ்களுக்கு ரூ.5000, தனியார் சர்வீஸ் வாகனங்களுக்கு ரூ.2000, நாடு முழுவதும் செல்லக்கூடிய வாகனங்களுக்கு ரூ.3000, சுற்றுலா மோட்டார் கேப் ரூ.1,500, இந்தியா முழுவதும் மற்றும் தென் இந்தியா பெர்மிட் சுற்றுலா மேக்ஸி கேப் ரூ.2,300 ஆக உயர்த்தப்படுகிறது.புதுப்பித்தல் கட்டணம் ஆட்டோவிற்கு ரூ.200, சரக்கு வாகனங்களுக்கு ரூ.1,500, ஆம்னி பஸ்களுக்கு ரூ.2,500, டூரிஸ்ட் மேக்ஸி கேப் ரூ.1,200, பள்ளி, கல்லூரி நிறுவன வாகனங்களுக்கு ரூ.500 ஆக உயருகிறது.இதேபோல தாமதமாக புதுப்பிக்கப்படுகிற வாகனங்களுக்கு கட்டணமும் உயர்த்தப்படுகிறது. பெர்மிட்டை வேறு பெயருக்கு மாற்றம் செய்தல், இறந்தவருக்கு பதிலாக உறவினர் மற்றும் குடும்பம் சார்ந்த உறுப்பினர்களுக்கு மாற்றம் செய்யவும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.மேலும் பெர்மிட் கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான கட்டணமும் அதிகரிக்கிறது. வாகனங்களில் 49 வகையான சேவைகளுக்கு கட்டணத்தை உயர்த்த போக்குவரத்துதுறை முடிவு செய்து அரசுக்கு அனுப்பி உள்ளது. இது விரைவில் அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்படும்.இதுகுறித்து சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்க மாநில தலைவர் பால சுப்பிரமணியன் கூறியதாவது:-அபராத கட்டணம் உயர்த்தப்பட்டு அந்த பாதிப்பில் இருந்து விடுபட முடியாத நிலையில் பெர்மிட், புதுப்பித்தல் உள்ளிட்ட கட்டணங்களின் சேவை உயர்த்த அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது ஆட்டோ தொழிலை மேலும் நசுக்குவதாக அமையும்.4 வருடத்திற்கு முன்பு ஆட்டோ பெர்மிட் புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்ய ரூ.30 ஆயிரம் செலவானது. ஆனால் இப்போது ரூ.60 ஆயிரம் ஆகிறது. இது பெரிய சுமையாகும். சாலை பராமரிப்பு எதுவும் இல்லை. ஆட்டோ கட்டணமும் 9 வருடமாக நிர்ணயிக்கப்பட வில்லை அவற்றை அரசு செய்தால் வரவேற்க தயாராக உள்ளோம். மாறாக கட்டணம், அபராதம் மட்டும் அதிகரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் கூறும் போது, ‘ஏற்கனவே இத்தொழில் மிகவும் நலிவடைந்துள்ள நிலையில் போக்குவரத்து துறை மேலும் சர்வீஸ் கட்டணத்தை அதிகரிப்பது கடினமாக உள்ளது.டீசல், சுங்க கட்டணம், இருக்கை மீதான வரி, உதிரி பாகங்கள் விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப் பட்டுள்ள உரிமையாளர்கள் நஷ்டத்தை தாங்கி வருகிறோம். இந்த சூழலில் பெர்மிட் உள்ளிட்ட பிற கட்டணங்கள் உயர்வது மேலும் இத்தொழிலை நசுக்குவதாக அமையும்’ என்றார்.