கோவை கொடிசியவில் வாகனங்கள் தொடர்பான யுனைடெட் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி துவக்கம்
கோவை கொடிசியவில் வாகனங்கள் தொடர்பான யுனைடெட் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி துவக்கம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
கோவையை தலைமையிடமாக கொண்ட யுனைடெட் ட்ரேடு ஃபேர்ஸ் இந்தியா நிறுவனம் ஆட்டோமொபைல் (Auto Expo), விவசாயம் (Agri), பில்டிங் (Building) கண்காட்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில்
இந்த நிறுவனத்தின் சார்பாக இரண்டாவது முறையாக ‘யுனைடெட் ஆட்டோ எக்ஸ்போ’ கண்காட்சி (UNITED AUTO EXPO) கோவை கொடிசியா அரங்கில் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இதன் துவக்க விழாவில், கோவை மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் துரைகண்ணன், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்க தலைவர் திருமூர்த்தி, செயலாளர் செந்தில்குமார், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முருகேசன், சவுத் இந்தியன் மோட்டார் உரிமையாளர் தண்டபாணி மற்றும் லாரி உரிமையாளர் பொது நல டிரஸ்ட் தலைவர் குமாரசாமி. செயலாளர் பழனிசாமி,இரு சக்கர வாகன தொழில்நுட்ப பொது நல சங்க தலைவர் சிங்கர்,எட்வின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
வாகனங்கள் தொடர்பான இந்த கண்காட்சியில் இந்தியாவில் முன்னணியில் உள்ள அசோக் லைலேண்ட் (ASHOK LEYLAND), பிரிக்கால் (PRICOL), எல்.ஜி.பி. (L.G.B.), ஸ்கோடா (SKODA), HYUNDAI, MG மோட்டார்ஸ், TATA மோட்டார்ஸ், மகேந்திரா உள்ளிட்ட பல முன்னனி நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன. மேலும் இந்த கண்காட்சியில் பல்வேறு வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள், புதிய மாடல் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உயர்தர பேட்டரி மற்றும் ஆயில் தயாரிப்பு நிறுவனங்களும் பங்கேற்று உள்ளன.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள கண்காட்சியில் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கபடுவார்கள் என யுனைடெட் ட்ரேடு ஃபேர்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.