திருவண்ணாமலை தீபத்திருவிழா: 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்; மலையேற கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா: 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்திருவண்ணாமலை தீபத்திருவிழா: 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்; மலையேற கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி*திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். மகா தீபத்தன்று மலையேற கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 6ம் தேதி மகா தீப பெருவிழா நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு, தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதையொட்டி, விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இந்நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நேற்று நேரடி கள ஆய்வு மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது, துறைவாரியாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விவரங்கள்:கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரை இணைக்கும் 9 பிரதான சாலைகளில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும். 12,400 கார்களை நிறுத்தும் இட வசதியுடன் 59 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்படும். தீபத்திருவிழாவுக்காக 2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடைகள் இயக்கப்படும். மேலும், வழக்கமாக இயக்கப்படும் 9 ரயில்களுடன், கூடுதலாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஆட்டோக்களுக்கு கட்டண நிர்ணயம் செய்யப்படும். பாதுகாப்பு பணியில் 12,097 போலீசார் ஈடுபடுவார்கள். 26 தீயணைப்பு வாகனங்கள், 600 தீயணைப்பு வீரர்கள், 150 வனத்துறையினரும் பணியில் ஈடுபடுகின்றனர். 1000 மாணவர்கள் தன்னார்வலர்களாக பணியில் ஈடுபடுவார்கள்.அண்ணாமலையார் கோயில் பிரகாரங்களில் 169 கண்காணிப்பு கேமராக்களும், கிரிவலப்பாதையில் 9 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு, 4 கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்கப்படும். முக்கிய இடங்களில் 57 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மீது, கடந்த காலங்களில் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தாண்டு 2,500 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.அன்னதானம் வழங்குவதற்கு தனியார் மண்டபங்கள், தனியார் இடங்கள் மற்றும் பொது இடங்கள் உள்பட மொத்தம் 101 இடங்கள் அனுமதிக்கப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதற்கான அனுமதியை பெறலாம். இவ்வாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.