உலககோப்பை 2022 கண்கவர் படங்கள்
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் கத்தார் அணியை 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஈகுவடார் வீழ்த்தியது.உலகமே உற்று நோக்கிய உலகக் கோப்பை காப்பந்து தொடர் கத்தாரில் தொடங்கியது. இதன் தொடக்க விழா அல்கோர் நகரில் உள்ள அல்-பேட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.60,000 ரசிகர்கள் திரண்டிருந்த இந்த மைதானத்திற்குள், பிரான்ஸ் ஜாம்பவான் மார்செல் டிசைலி, உலகக் கோப்பையுடன் வலம் வந்தார். அப்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரத்தால் கத்தாரே அதிரும் வகையில் இருந்தது. இதையடுத்து, ஹாலிவுட் நட்சத்திரம் மார்கன் ஃப்ரீமன், நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பது குறித்து எடுத்துரைத்தார்.பின்னர், அரங்கேறிய கலை நிகழ்ச்சிகளை, ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். மேலும், தென்கொரிய பாப் பாடகர் BTS ஜங் கூக்கின் இசைமழையில் ரசிகர்கள் நனைந்தனர். மேலும், தொடக்க விழாவின் போது நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கையால் அல்கோர் நகரமே ஒளி வெள்ளத்தில் மிதந்தது.இதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் போட்டியில், கத்தார் மற்றும் ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உலகக்கோப்பைத் தொடரின் முதல் கோலை ஈகுவடார் அணியின் நட்சத்திர வீரர் வெலன்சியா அடித்தார். அடுத்த அரை மணி நேரத்திற்குள் அவரே 2வது கோலையும் அடித்து, அணியை முன்னிலையே வைத்திருந்தார். அதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க முடியாததால், ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் கத்தார் அணியை 2க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஈகுவடார் அணி வெற்றிபெற்றது.